மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரே எதிரே வந்த மின்சார ரயில். அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு
சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு நகரை சென்னை உள்பகுதியில் இணைக்கக்கூடிய முக்கிய பொது போக்குவரத்தில் ஒன்றாக, மின்சார ரயில்கள் உள்ளது. நாள்தோறும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை வேலைகளில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள் மின்சார ரயில்களை பயன்படுத்தி தங்களுடைய அன்றாட பயணத்தை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. முக்கிய காரணம் ரயிலில் செல்வது பாதுகாப்பு மற்றும் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்தநிலையில் இன்று ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென சிக்னல் கோளாறு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் - சிங்கபெருமாள்கோவில் இடையே இடைப்பட்ட பகுதியில் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் எதிரொலியாக சிங்கபெருமாள்கோவில் - மறைமலைநகர் இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது
மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிக்னல் கோளாறு சரி செய்த பிறகே ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மூன்று ரயில் பாதைகள் இருப்பதால் சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில் தாமதமாக செல்லக்கூடாது என்பதற்க்காகவே மின்சார ரயில்கள் தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறினர். இதுகுறித்து தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரயில் வேகமாக செல்லும் பொழுது இது போன்ற சிக்னல் கோளாறு ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் பாதிப்பு
வாரத்தில் முதல்நாளான திங்கள் கிழமை சிக்னல் கோளாறு ஏற்பட்டதின் காரணமாக வேலைக்கு செல்பவர் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உருவானது. ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் தண்டவாளத்தில் வந்ததால் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தினால் பெரிதளவு பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.