தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாகவே விடாமல் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

வடகிழக்கு பருவ மழை


 

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். 



 


செம்பரம்பாக்கம் ஏரி


சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும், பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த 2015ஆம் ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிட்டப்பட்ட நீரால், சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் குறித்து காணலாம்.

 


 


 ஏரி நிலவரம் 


கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு 700 கன அடியாக உயர்ந்துள்ளது.  தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 2131 கன அடி குறைந்துள்ளது. நேற்று மாலை 3 மணிக்கு ஆயிரம் கன அடி நீர்  திறந்துவிடப்பட்டது. ஏரியின் நீர்மட்டம்  20.90 அடியை எட்டியுள்ளது.. நீர்வரத்து குறைந்தது எதிரொலியாக ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு 500 கனஅடியாக நீர் வெளியேறி வருகிறது


பூண்டி


பூண்டி ஏரியில் இருந்து 53கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 


புழல்  ஏரி 


 நீர்வரத்து 710 கன அடியாக உள்ளது. வெளியேற்றம் 500 கன அடியாக உள்ளது .


 




 


வானிலை அறிவிப்பு 


14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.