வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான கனமழை நேற்றிலிருந்து பெய்து வருகிறது. 


இதனால்,மாண்டஸ் புயலினால் பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று மதியம் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இன்று(9-12-22) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கன அடி நீர்வெளியேற்றப்படும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும்  மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார். அதன்படி தற்போது முதல்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழைப்பொழுவு அதிகமாக இருந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. 


அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், புழல் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துகொண்டே உள்ளது. இதனால், இன்று மதியம் முதல் கட்டமாக, ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது முதல்கட்டமாக 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த நீர்மட்டம் என்பது 21 அடி, இன்று காலை நிலவரப்படி ஏரியில் 17 அடி நிரம்பி இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 140 கன அடி நீர் வந்துகொண்டு இருந்தது. 


இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்தும் முதல்கட்டமாக 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழைப்பொழுவு அதிகமாக இருந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. 


இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.