மத்திய அரசு அனுமதி:


மதுரவாயல் - துறைமுகம்  ஈரடுக்கு உயர்மட்ட  சாலைக்கு நிபந்தனைகளுடன், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பின்படி, ரூ.5,855 கோடி செலவில் 20.565 கிலோமீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை  கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 604 தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 375 தூண்கள் கூவம் ஆற்றிலும், 210 தூண்கள்  கடலோர மண்டல  மேலாண்மை பகுதிக்குள்ளும் அமைகின்றன.


நிபந்தனைகள்:


அவ்வாறு  உயர்மட்ட சாலைக்காக எழுப்பப்படும்  தூண்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டங்களுக்கு தடை ஏற்படக் கூடாது. கூவம் ஆற்றை மேலாண்மை செய்து வரும்  பொதுப் பணித்துறையுடன் கலந்தாலோசித்து  ஆற்றின் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 


 


மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு சாலை:


சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. ஆனால்,  கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த தூண்கள் அனைத்தும் நிரந்தரமாக போஸ்டர் ஒட்டுவதற்கான அம்சமாக மாறி காணப்படுகிறது.


இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு மே மாதம், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, விரைவில் இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திட்டம்:


மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.