ஜல் ஜீவன் மிஷன்

 

ஜல் ஜீவன் மிஷன் என்பது 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.  நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற நடவடிக்கைகளை இந்த திட்டத்தின் மைய நோக்கமாகும்.

 

பிரதமர் விருது

 

அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பிரதமர் விருது காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பிரதமர் கையால் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குடிநீர் தரம் பரிசோதனை

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜல் ஜீவன் திட்டம் துவங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு, மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இறுதியில் இத்திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்

 

இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். பைப் லைன் பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருது பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.