கடந்த மாதம் கோவாவில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியான சோனாலி போகத்தின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு அமைப்பு, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக சோனாலி மற்றும் அவரது உதவியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அறைகளில் இன்று சோதனை செய்தது. 


இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கு முன் விசாரணை நடத்தி வந்த கோவா போலீசார், விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டலில் உள்ள அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.


சிபிஐ குழு, ஆவணங்களை சேகரித்த பிறகு வழக்கை விசாரித்த உள்ளூர் காவல்துறை அலுவலர்கள் மற்றும் சோனாலிக்கு உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களை தொடர்புகொள்வார்கள் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். ஹரியானாவில் உள்ள சோனாலி போகட்டின் சகோதரர்களிடம் மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளது.


 






இதுகுறித்து சோனாலியின் சகோதரர் வதன் டாக்கா கூறுகையில், "சிபிஐ குழுவினர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் எங்கள் சகோதரரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலத்தை பெற்றனர்" என்றார்.


சோனாலி போகட்டின் மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.


 






கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கடிதம் மூலம் பரிந்துரை செய்ததையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சோனாலி போகத் (43), கடந்த மாதம் கோவாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் அடைந்தார். அது கொலை வழக்காகக் கருதப்பட்டு வருகிறது.


இதுவரை, இந்த வழக்கு தொடர்பாக அவரது ஆண் உதவியாளர்கள் சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.