தமிழகத்தின் விவசாய பரப்பில் குறிப்பிடத்தக்க சாகுபடி பயிராக இருப்பது மக்காச்சோளம் விளங்க்குகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிறுவாடி, நகர், நல்லம்பாக்கம், வடநேற்குனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அறுவடை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பொது வெளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை உள்ளதால் மிக குறைந்த அளவிலேயே மக்காச்சோளம் விலை போகிறது எனவும், இதனால் இந்த வருடம் மக்காச்சோளம் எதிர்பார்த்த அளவிற்கு விலை போகவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நிவர் மற்றும் புரவி புயல் எதிரொலி பருவ மழை தொடர்ந்து பெய்து வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு தாக்கம் சற்று குறைந்து நல்ல விளைச்சல் அடைந்துள்ளதோடு வெளி மாநில மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்யாமல் கதிர்கள் செடிகளிலே காய்ந்து கருகும் நிலையில் சில விவசாயிகள் மட்டுமே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடியாகும் மக்காச்சோளம் உணவுப்பொருளான குளுக்கோஸ் தயாரிப்பு மற்றும் கோழி, ஆடு, மாடுகளின் தீவனங்கள் தயாரிப்பதற்கும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எனவே ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளதால் எப்போதும் ஓரளவுக்கு விலை இருக்கும். தற்போது மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் வியாபாரிகள் தோட்டத்திற்கே சென்று கொள்முதல் செய்து வருவதால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
கடந்த ஆண்டு 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் 2 ஆயிரம் முதல் 2500 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் 100 கிலோ மக்காச்சோள மூட்டையை 1000 ரூபாய்க்கு கூட கேட்க ஆளில்லாமல் மக்காசோளத்தை சாலைகளில் கொட்டி உலர்த்தி வருவதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் ஏற்கனவே படைப்புழு தாக்குதல், விதை, உரம் உள்ளிட்டவற்றுக்கு அதிக செலவு செய்துள்ளோம். மேலும் தற்போது அறுவடைக்கும் செலவாகிறது.
ஆண்டு முழுவதும் தேவைகள் இருந்தும் மக்காச்சோளத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் உற்பத்தி செய்வதற்கான செலவு கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மக்காச்சோள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.