சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது.

 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார்.

தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார். 

 

இந்த நிலையில் தனக்கு ஜாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததும் தெரியவந்தது.

 

தீக்குளித்த வேல்முருகனுக்கு 95 சதவீத தீக்காயங்களுடன்ன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயத் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் முன்பு ஆஜரான வழக்கறிஞர்  சூர்யாபிரகாசம், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இது குறித்து தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

 

இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளரை அழைத்து  சம்பவம்  குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், தலைமை நீதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


 



 
















சென்னையில் இருந்து டில்லிக்கு 3 கிலோ கொகைன் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில்

மிசோரம் வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து டில்லிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு  பிரிவு போலீசார், சென்னையில் இருந்து டில்லி செல்லும் ரயில்களில் சோதனை நடத்தினர். 

 

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்,  முதல் வகுப்பில் பயணம் செய்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் என்ற வாலிபரிடம் 3 கிலோ கொகைன் எனப்படும் விலை உயர்ந்த போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். 

 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த  சென்னை  போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறை  தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.