கடந்த மாதம் 17ம் தேதி சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு விமான முனையத்தில் தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக் செல்லும் தாய் ஏா்லைன்ஸ் சரக்கு விமானம் புறப்பட தயாரானது. அந்த  சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்கு 15 பெட்டிகள் தயாராக இருந்தன. அதனுள் கடல் நண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.




 

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா், சரக்கு விமானத்தில் ஏற்றப்படும் அனைத்து பாா்சல்களையும் பரிசோதித்து ஆய்வு செய்தனா். அவா்களுக்கு இந்த 15 பாா்சல்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த பாா்சல்களை திறந்து பாா்த்து பரிசோதித்தனா். அதில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து 15 பாா்சல்களையும் விமானத்தில் ஏற்றாமல் நிறுத்தி வைத்தனா். அதன் பின் ஒவ்வொரு பாா்சல்களாக திறந்து பாா்த்து, நட்சத்திர ஆமைகளை எண்ண தொடங்கினா். 15 பாா்சல்களிலும் மொத்தம் 2,500 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். 



 

இதுகுறித்து  மத்திய வன உயிரின காப்பக குற்றப்பிரினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த பாா்சல்களில் இருக்கும் முகவரிகள், போன் எண்கள் அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் சென்னை வேளச்சேரியில் உள்ள வன உயிரின காப்பகத்து அனுப்பி வைத்தனா். அதோடு சுங்கத்துறையும், வனத்துறையும் இணைந்து, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா். இதையடுத்து கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகள், வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


 

இத விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்ததைச் சேர்ந்த வினோத் என்பவரை  கைது செய்தனர். இந்த வழக்கை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற சுங்கத்துறை மற்றும் மத்திய வனகுற்றப் புலனாய்வு துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் முறைப்படி இந்த வழக்கு விசாரணையை சிபிஐயின் வசம் ஒப்படைத்தனர். சமீபகாலங்களாக சென்னை விமானத்தில் தொடர்ந்து இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.