அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செய்லாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே சி டி பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் தங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தங்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பின், அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்ததாகக் கூறியுள்ளார். நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மற்றொரு வழக்கு
அதிமுக அலுவலகத்தை சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்ற இருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, விசாரணை துரிதப்படுத்தும்படி சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 7ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சி.வி.சண்முகத்தின் மனுக்களை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.