திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஏழுமலை - செல்வராணி ஆகிய தம்பதியினருக்கு, 2 மகன் 1 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாம்ராஜ் வயது (21). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். மேலும் களம்பூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மற்றும் சாம்ராஜ் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்ததால் காதலுக்கு பெற்றோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர் மாணவியை தனது உறவினருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தனர். இதனால் மாணவி சாம்ராஜின் உறவை துண்டித்து பேச்சு வார்த்தை அடியோடு நிறுத்திவிட்டாராம். இதனால் சென்னையில் இருந்து வந்து நேரில் பேசியுள்ளார். ஆனால் மாணவி பேச மறுத்துவிட்டார். பின்னர் நேற்று காலையில் சாம்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் முருகேஷ், சந்தோஷ் ஆகிய 2 நண்பர்களுடன் மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.
அப்போது மாணவி சாம்ராஜை பார்த்து ‘உன்னிடம் பேச விரும்பவில்லை. எனது உறவினர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக’ கோபத்துடன் தெரிவித்துள்ளார். இதனால் சாம்ராஜ் மற்றும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நடந்த சம்பவத்தை சாம்ராஜ் தனது உறவினர் சம்பத் என்பவரிடம் தொலைபேசி மூலமாக அழதப்படி தெரிவித்துள்ளாராம். இந்நிலையில், மனமுடைந்த சாம்ராஜ் மனவேதனையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதை அறிந்த சாம்ராஜ் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய தாய் செல்வராணி சாம்ராஜ் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்ததை கேட்டு ஓடிவந்துள்ளனர்.மேலும் வீட்டின் கதவை உடைத்து தூக்கில் தொங்கி இருந்த சாம்ராஜை மீட்டு, ஆரணி அரசுமருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.
பின்னர் சாம்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் சாம்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரித்துள்ளனர். அங்கேயே பெற்றோர்கள் கதறி அழுதனர். மேலும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையிலேயே உடல் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தை வெங்கடேசனை கைது செய்யகோரி சாம்ராஜ் உறவினர்கள் களம்பூர் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் களம்பூர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வெங்கடேசனை கைது செய்வதாக உறுதியளித்தன் பேரில் சாம்ராஜ் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.மேலும் தலைமறைவான வெங்கடேசனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060