பெட்ரோல் பங்கில் கார் எடுத்து செல்ல முயற்சி

Continues below advertisement

சென்னை வியாசர்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ( வயது 36 ) இவர் அம்பத்தூரில் கடந்த 15 வருடங்களாக கார் சர்வீஸ் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மனித உரிமைகள் பிரிவில் மாநில செயலாளராக உள்ளார். இவர் தனது காருக்கு டீசல் நிரப்புவதற்காக வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். 

அப்போது தனது காருக்கு டீசல் போட்டு விட்டு காரில் இருந்து கீழே இறங்கி தனது ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் கொடுத்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாது நபர் மெல்வின் ஒட்டி வந்த பார்ச்சூனர் காரை எடுத்துக் கொண்டு செல்ல முயற்சி செய்தார். மெல்வின் அதனை தடுக்கும் போது அவரை இடித்து விட்டு அங்கிருந்து அதிவேகமாக சென்றுள்ளார்.

Continues below advertisement

செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த மெல்வின் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பணியில் இருந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர் மெல்வின் காரை ஓட்டிச் சென்ற போது அவரது செல்போனும் காருக்குள் இருந்துள்ளது. இதனை வைத்து செல்போன் சிக்னலை போலீசார் பின் தொடர்ந்துள்ளனர்.

அப்போது வண்டி கும்மிடிப்பூண்டியில் இருப்பது தெரிய வந்தது. அடுத்த சிறிது நேரத்தில் அதே கார் மீண்டும் சென்னை நோக்கி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் காரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது புழல் பகுதியில் கார் பஞ்சராகி நின்றதால் காரில் இருந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.

புழல் பகுதியில் கார் கண்டுபிடிப்பு

மேலும் காரில் இருந்த இரண்டு செல்போன்களையும் அந்த நபர் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனையடுத்து போலீசார் காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடியவர் கொண்டு சென்ற செல்போனை வைத்து புழல் பகுதியில் காரை எடுத்துச் சென்ற நபரை பிடித்தனர். 

அவரை வியாசர்பாடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கண்ணதாசன் நகர் எட்டாவது பிளாக் இரண்டாவது தெருவை சேர்ந்த சூர்யா ( வயது 25 ) என்பதும் இவர் மீது நான்கு குற்ற வழக்குகள் இருப்பதும்தெரிய வந்தது. 

இவர் தனது நண்பரான மணலி பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 28 ) என்ற நபருடன் குடிபோதையில் காரை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பரத்தையும் கைது செய்த போலீசார் சூர்யா மற்றும் பரத் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.