திருவள்ளூர், செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் அருகே உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.


உயிர்சேதம் ஏதுமில்லை


நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட விபத்தால், அந்த நேரத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இந்த பெரும் தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளாதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் நிலவுகிறது.



மக்களுக்கு சுவாச பாதிப்பு


தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 7க்கும் மேற்பட்ட வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் மாஸ்க் அணிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!


மின்கசிவு காரணமா?


மேலும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் யூகிக்கின்றனர்.



தொடரும் மின்கசிவு தீ விபத்துக்கள்


இதே போல மூன்று வாரங்கள் முன்பு சென்னையின் மிகவும் பழமையான 15 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடம் தீவிபத்திற்கு உள்ளானது. அங்கு ஏப்ரல் 2 ஆம் தேதி, மேலே இருக்கும் எல்இடி போர்டு தனியாக தீப்பிடித்து எரிந்தது. அன்றும் வார விடுமுறைக்கு தினம் என்பதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அங்கும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் குவிந்து தீ எங்கும் பரவாமல் தடுத்த நிலையில் யாருக்கும் பாதிப்பின்றி அணைக்கப்பட்டது. இதே போல சென்னை சந்தோமில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை கட்டிடம் இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தீப்பிடித்தது. அப்போதும் உயிரிழப்புகள் ஏதுமின்றி காப்பற்றிவிட்டாலும் மின்கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துக்கள் அதிகமாகி உள்ளன. அதற்கு காரணம் பழைய கட்டிடங்களில் பராமரிக்கப்படாமல் இருக்கும் ஒயரிங் என்று பல காலங்களாகவே பொறியாளர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்ப நடவடிக்கைகளை அந்தந்த கட்டிட உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.