தமிழ்நாட்டில் சமீப காலமாக பேருந்துகளில் ஆபத்தான முறையில் , கல்லூரி  மற்றும் பள்ளி மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி,  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவப்பொழுது இதுகுறித்து காவல்துறையினர், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இது போன்ற மாணவர்கள் தொங்கி சென்ற பொழுது, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே ஒரு பள்ளி மாணவன் கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 



 

இந்தநிலையில், சென்னை அடுத்த ஊரப்பாக்கம் மகாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர், பாஸ்கர் இவரது மகன் சஞ்சய் (18). சஞ்சய் வண்டலூர் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள, இந்துஸ்தான் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் அரசு பேருந்தில் சஞ்சய், கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். வழக்கம் போல வண்டலூர் மெயின் ரோடு அருகே தாம்பரத்திலிருந்து, திருப்போரூர் சென்ற அரசு பேருந்தில்,  பயணம் செய்த சஞ்சய், பேருந்தில் முன் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு வந்த சஞ்சய்,  எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த சஞ்சய் பேருந்தில், பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.



பின்பு தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவன் பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.