சென்னை K.P.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி  குடியிருப்புகளில் உள்ள வீட்டின் சுற்றுசுவர், பில்லர், படிக்கட்டுகள் இவை அனைத்தும் பெயர்ந்து பல ஆண்டுகள் ஆன கட்டடம் போல இருப்பதாகவும், இதனால், இந்தப் பகுதியில் இருக்க பயமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கடந்த 17ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தனர். இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகள், டிவி சேனல்களிலும் வெளியானதைத் தொடர்ந்து,  சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிதிலமடைந்த இடங்களை பார்வையிட்டுனர். பின்பு அவசர அவசரமாக பணியாளர்களை வரவழைத்து சிதிலமடைந்து கிடந்த அனைத்து இடங்களிலும் சிமெண்ட் வைத்து பூசி சரி செய்தனர். இந்நிலையில் இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் தங்கள் தரப்பு விளக்கத்தை பத்திரிகை விளம்பரமாக வெளியிட்டுள்ளார். 


அதில், ''எங்களது PST கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் கட்டுமான பணியில் கடந்த 25 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தால் கமார் 100க்கும் மேற்பட்ட Projectகள் அரசிற்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பணி முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும், எங்கள் பணி ஒப்பந்த நிபந்தனைகள் படி திருப்திகரமாக சிறந்த முறையில் முடிக்கப்பட்டதாகவும்குடிசை மாற்று வாரியத்தின் செயற்பொறியாளரால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் கட்டுமான பணியினை துவங்கிய நாள் முதல் கன ஆய்வுகளை அன்றாடம் குடிசைமாற்று வாரிய பொறியாளர்களாலும், வாரத்திற்கு இரண்டு முறை குடிசை மாற்று வாரியத்தால் நியமனம் செய்யப்பட்ட தனியார் பொறியாளர்களாலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிய பகுதியில் முன்பு வரித்த குடிசைவாழ் மக்கள் அப்பகுதியின் அருகிலேயே தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஷெட்டுகளில் வசிப்பதால் அவர்களும் எங்களது கட்டுமான பணியை நேரில் பார்த்து வந்தனர்,




இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சென்னை K.P.பார்க் பகுதியில் எங்களது நிறுவனத்தால்' கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தரமான முறையில் கட்டப்படவில்லை என்றும், அதன் காரணமாக பெரும்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வருகின்றன. அச்செய்தியை கேட்டு எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர். அச்செய்திகள் துளியளவும் உண்மையல்ல. எங்கள் நிறுவனத்தால் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்ட  கட்டுமானங்களை குடிசைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒதுக்கீடு செய்யாமல் அதனை கொரானா தொற்றின் காரணமாக கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக தற்காலிக மருத்துவமனையாக சென்னை மாநகராட்சியால் ஓராண்டு காலம் பயன்படுத்தப்பட்டதில் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் படிக்கட்டுகள் வழியாக எடுத்து சென்று அதன் காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளது. 


அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் முன்பு வசித்த குடிசை வாழ் மக்களுக்கு புதிய அடுக்கு மாடி வீடுகள் இதுநாள் வரை ஒதுக்கப்படாததால் ஆத்திரமுற்ற அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்து பல பொருட்களை திருடியும் சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். அதுகுறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவி செயற்பொறியாளரால் சென்னை மாநகரம் Basin Bnidge P4 காவல் நிலையத்தில்  சமூக விரோதிகள் மீது புகாரும் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் உழைப்பால் உயர்ந்திருப்பதை சகித்து கொள்ள இயலாத எங்கள் துறையைச் சேர்ந்த சக ஒப்பந்ததாரர்கள் அப்பகுதியில் வசித்த குடிசைவாழ் மக்கள் புதிய கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தால் குடிசை மாற்று வாரியம் அவர்களுக்கு "வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு வீடு ஒன்றிற்கு கிரைய தொகையாக ரூ.1,50,000 பெற்று கொள்ளாமல் இலவசமாக வீட்டை வழங்கி விடுவார்கள் என்று அவர்களை தூண்டியிட்டு சேதங்களை விளைவித்து எங்கள் நிறுவனத்தின் மீது அப்பட்டமான பழியை சுமத்தி வருகிறார்கள்




எங்கள் நிறுவனத்தின் சார்பாக நல்லாட்சி வழங்கும் தமிழக அரசிற்கும், பொதுமக்கள் அனைவருக்கும் பணிவுடன் தெரிவிப்பது யாதெனில் K.P.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு எங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டுமான குறைபாடுகளோ, அல்லது தரமற்ற பொருட்களே காரணம் அல்ல என்பதனை பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் நிறுவணத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ர்கள்மீதும் அதற்கு தூணை போகும் நபர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


முன்னதாக, புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றபோது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “தொட்டாச்சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக கட்டியுள்ளது. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது. கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த  ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. இதேபோல், புளியந்தோப்பு கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பல லட்ச ரூபாய் செலவில் தனது தரப்பு விளக்கத்தை விளம்பராக வெளியிட்டுள்ளார் ஒப்பந்ததார்ர்.