Broadway Bus Stand Revamp: சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) புனரமைத்து வரும் நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் ஒப்புதல் பெறப்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தின் புனரமைப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. வாஷிங்டனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் பிராட்வேயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (Broadway New Bus Stand) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அடுத்த கட்டத்திற்கு செல்லும் சென்னை:

மும்பை, டெல்லி, கொல்கத்தாவுக்கு பிறகு முக்கிய நகரமாக கருதப்படுவது சென்னை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்ற சென்னை, தென்னிந்தியாவின் பொருளாதார மையமாக திகழ்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்த பிறகு, சென்னையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

822.7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள்:

அந்த வகையில், நகரின் பல்வேறு பேருந்து நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் (North Chennai Development Plan) கீழ், 822.7 கோடி ரூபாய் மதிப்பில் பிராட்வேயில் பழைய பேருந்து நிலையத்திற்கு பதிலாக பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பிராட்வேயில் பேருந்து நிலையத்தை புனரமைப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்திடமிருந்து 200 கோடி ரூபாயும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (CMDA) இருந்து 115 கோடி ரூபாயும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து (TUFIDCO) 506 கோடி ரூபாயும் வழங்க உள்ளது.

பழைய பிராட்வே பேருந்து நிலையம் - Old Broadway bus Stand:

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி, கடந்த 1957ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிராட்வேயில் கொஞ்சம் கொஞ்சமாக வசதிகள் வர தொடங்கிய பிறகு, நகரின் முக்கிய பொருளாதார மண்டலமாக பிராட்வே உருவானது. இதையடுத்து, எஸ்பிளனேடு சாலை அருகே பிராட்வே புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பேச்சுகள் தொடங்கி இருக்கின்றன. கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பு வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்துதான் இயக்கப்பட்டிருக்கிறது.  தற்போது, அதே இடத்தில்தான் பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. 

காலப்போக்கில் இட நெருக்கடியாலும் ஆக்கிரமிப்புகளாலும் ஒரு பேருந்து நிலையம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது பிராட்வே பேருந்து நிலையம். இதையடுத்து, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப பிராட்வே பேருந்து நிலையம் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் வசதிகள்- New Broadway bus Stand Facilities:

குறளகம் வளாகத்தையொட்டி வர உள்ள பிராட்வே புதிய பேருந்து நிலையம், 10 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இரண்டு பேஸ்மெண்ட்களிலும் இரண்டு தளங்கலிலும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 6 தளங்களில் வணிக வளாகங்கள் வர இருக்கின்றன. தோராயமாக 1,100 பேருந்துகளை நிறுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட உள்ளது. மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைய உள்ளது.

பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ஏதுவாக பல நுழைவாயிகள் மற்றும் வெளியேறும் வழிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் நிற்பதற்காக தனி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. 700 கார்கள் மற்றும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் அமைய உள்ளது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது. NSC போஸ் சாலையைக் கடக்கும் வசதி மற்றும் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் கட்டப்பட உள்ளது. 

எப்போது தொடங்கும் புனரமைப்பு பணிகள்:

பிராட்வேயில் பேருந்து நிலையம் புனரமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் பி. கே. சேகர் பாபு, கடந்த 2024ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அறிவிப்பு வெளியாகி 7 மாதங்களுக்கு பிறகும், எந்த விதமான பணிகளும் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) இன்னும் நிலத்தை தரவில்லை. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, புனரமைப்பு பணிகள் தொடங்கும்" என்றார்.