சென்னை (Chennai News): லண்டனிலிருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து அதிகாலை 5:30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் நேற்று, வரும்போது ஒரு மணி நேரம் தாமதமாக 4:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த நிலையில் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், சென்னையில் இருந்து இன்று லண்டன் செல்வதற்கு 276 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலை 2:30 மணிக்கு முன்னதாகவே, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
ஆனால் லண்டனில் இருந்து சென்னை வந்த அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது, என்று அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, குறிப்பு எழுதி விட்டு, அதை சரி செய்த பின்பு விமானத்தை இயக்கவும் என்று கூறிவிட்டு, ஓய்வுக்கு சென்று விட்டார். இதை அடுத்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நேற்று தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும் என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. பயணிகள் யாரும் விமானத்தில் ஏற்றப்படாமல், ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
விமான பொறியாளர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நேற்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகள் அனைவரும் சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் இன்று காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 276 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்