திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மற்றும் தண்டராம்பட்டு தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையடுக்கும் நபர்களிடமும், உரிமம் பெறாமல் ஆற்று மணல், ஓடை மணல் மற்றும் முரம்பு மண் எடுக்கும் நபர்களிடமும், பட்டா நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டிச் செல்லும் விவசாயிகளிடமும் காவல் துறையினர் லஞ்சம் கேட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சாத்தனூர் அணை காவல் நிலையத்தின் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் சுரேஷ் வயது (52) இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர், அவரது நிலத்தில் உள்ள வேப்பம், தைலம் மரங்களை கடந்த 9ம் தேதி மரம் வெட்டும் ஆட்களை வைத்து வெட்டியுள்ளார்.
இந்த மரங்களை லோடு வேனி ஏற்றி விற்பனைக்காக வியாபாரி எடுத்து சென்றார். அப்போது, அங்கு வந்த சுரேஷ் லோடு வேனை தடுத்து நிறுத்தி ''மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளீர்கள். பணத்தை கொடுத்துவிட்டு மரத்தை எடுத்து செல்லுங்கள்' எனக்கூறி மிரட்டியதாக தெரிகிறது.இதனால், அதிர்ச்சியடைந்த மர வியாபாரி, ''என்னிடம் 600 ரூபாய் தான் உள்ளது'' எனக்கூறி அதை சுரேஷிடம் கொடுத்துள்ளார். சுரேஷ் பணத்தை வாங்கிக்கொண்டு மர வியாபாரி மற்றும் மரம் வெட்டும் கூலி ஆட்களை அங்கிருந்து அனுப்பியுள்ளார். இதற்கிடையில் சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி, பணம் வாங்கியதை அங்கிருந்த ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ நேற்று முதல் வைரலானது. இதையறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேரடியாக சாத்தனூர் அணை காவல்நிலையத்திற்கு சென்று சிறப்பு துணை ஆய்வாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பியை விசாரணை நடத்தி இதுகுறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்திய டிஎஸ்பி இந்த சம்பவம் குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளார். உடனடியாக சிறப்பு துணை ஆய்வாளர் சுரேஷை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.