தமிழ்நாட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரம் மாநிலத்தின் தலைநகரம் சென்னை. நமது மக்களுக்கு திங்கள் முதல் சனி வரை மிகவும் இயந்திரம் போல பரபரப்பாக இயங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே தனி உற்சாகம் பிறந்துவிடும். அதுவும் சென்னைவாசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் தனி சந்தோஷம்தான்.


வீட்டிற்குள்ளே அடைந்து கிடக்கும் சென்னைவாசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கு முதலில் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரையும், வண்டலூர் மிருககாட்சி சாலையுமே ஆகும். ஆனால், சென்னையில் குடும்பத்துடன் வெளியில் சென்று சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளது. அவற்றை சுருக்கமாக கீழே காணலாம்.


கத்திப்பாரா சதுக்கம்:


சென்னையின் முக்கிய பகுதியான கிண்டி அருகே அமைந்துள்ளது ஆலந்தூர். இந்த பகுதியில் அமைந்துள்ளது பிரபல கத்திப்பாரா மேம்பாலம். இந்த மேம்பாலத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது கத்திப்பாரா சதுக்கம். குழந்தைகளுடன் குடும்பமாக வெளியில் செல்வதற்கு மிக ஏற்ற இடம் கத்திப்பாரா சதுக்கம். பச்சை பசேல் புல்வெளிகள், குழந்தைகள் விளையாடுவதற்கு தனி இடங்கள், அதிகாலை வரை இயங்கும் பரபரப்பான கடைகள், கார், பைக் பார்க்கிங் வசதிகளுடன் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக கத்திப்பாரா சதுக்கம் உள்ளது.


அண்ணாநகர் டவர் பார்க்:


அண்ணாநகரில் உள்ள டவர் பார்க் சென்னையில் உள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். இந்த பூங்காவில் உள்ள கலங்கரை விளக்கம் போன்ற மிக உயரமான கட்டிடம் அதில் உள்ள சிறப்பம்சம் ஆகும். அங்குள்ள ஸகேட்டிங் செய்வதற்கான மைதானம் உள்பட பல இடங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடம் ஆகும். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செல்வதற்கு உகந்த இடமாக பயன்படுத்துகின்றனர்.


கோரா ஃபுட் ஸ்ட்ரீட்:


சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர்களில் ஒன்று அண்ணாநகர். இந்த பகுதியில் உணவகங்களின் ஹப் என்று அழைக்கும் விதத்தில் அமைந்துள்ளது கோரா ஃபுட் ஸ்ட்ரீட். ஏராளமான உணவகங்கள் வரிசையாக, வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு அமைந்திருக்கும். அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும் இந்த பகுதிக்காகவே தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.


திரு.வி.க. பூங்கா:


அண்ணாநகருக்கு அடுத்த ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது திரு.வி.க. பூங்கா. தற்போதைய தி.மு.க. அரசால் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்குவதற்கு மிக சிறந்த பூங்கா ஆகும். இளைஞர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏராளமான அம்சங்கள் இந்த பூங்காவில் உள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றிலும் பச்சைப்புல்வெளிகளுடன் மிக ரம்மியான தோற்றத்தை கொண்டுள்ளது இந்த பூங்கா.


பாலவாக்கம் கடற்கரை:


மெரினா கடற்கரையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது இயல்பு. மக்கள் நெருக்கடி அதிகம் இருப்பதால் சிலர் மக்கள் கூட்டம் குறைவாக உள்ள கடற்கரைக்கு செல்ல விரும்புவார்கள். பெசன்ட் நகர் கடற்கரையும் பரபரப்பாகவும் மக்கள் கூட்டமாகவும் இருப்பதால் பாலவாக்கம் கடற்கரைக்கு செல்வது சிறந்த தேர்வாக இருக்கும். நல்ல அமைதியான சூழலில் கடலின் அழகை நன்றாக ரசிக்கலாம். நீலாங்கரை கடற்கரையும் அமைதியான சூழலில் காணப்படும்.


பிரபல வணிகவளாகங்கள்:


சென்னைவாசிகளின் பெரும்பாலும் பொழுது போக்கு அம்சங்களாக சமீபகாலமாக மாறியிருப்பது இந்த பெரும் வணிகவளாகங்களே ஆகும். சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால், வடபழனியில் உள்ள ஃபோரம் மால், திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மால் ஆகியவை தற்போது சென்னை வாசிகள் தங்களது நேரத்தை செலவிடுவதற்கு சிறந்த இடமாக மாறியுள்ளது. திரையரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் என பலவற்றை உள்ளடக்கிய இந்த வணிக வளாகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் ஆகும்.


தியோசோபிக்கல் சொசைட்டி:


சென்னையின் பரபரப்பான சத்தமும், இரைச்சலும் துளியளவும் கேட்காத குயில் இசை கேட்கும் ஒன்று உள்ளது என்றால் அது அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டி ஆகும். புகழ்பெற்ற அடையாறு ஆலமரம் இதன் உள்ளேதான் உள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த அடர்ந்த பூங்கா ஒரு பசுமைக்கூடாரம் என்றே சொல்லலாம். ஏராளமான மரங்களும், செடிகளும் நிறைந்த இந்த இடம் எப்போதும் குளுமையாக இருக்கும்.


விடுமுறை நாட்களில் மேலே கூறிய இடங்களுக்கு குடும்பங்களுடன் சென்று நீங்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். இவை மட்டுமின்றி சென்னையில் ஏராளமான இடங்கள் சுற்றிப்பார்க்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.