திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒன்னுபுரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் வயது ( 24 ). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு காவல்துறை பணியில் சேருவதற்காக வேலூர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக தினந்தோறும் சென்று வந்துள்ளார். அப்போது அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த துர்கா வயது (21) இவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு  காவல் துறை பணியில் சேர்வதற்காக வேலூர் மைதானத்தில் பயிற்சிக்காக சென்றுவந்துள்ளார். அப்போது ஆகாஷ்க்கும் துர்காக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனை அடுத்து ஆகாஷ் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காதலன் ஆகாஷிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.


பள்ளி மாணவிக்கு காதல் வலைவீசி 


அதற்கு ஆகாஷ் நான் வேலைக்குச் சென்ற பிறகு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆகாஷ் துர்காவிடம் பழகி வந்ததை மெல்ல மெல்ல குறைத்து கொண்டுள்ளார். மேலும், துர்கா காதலன் ஆகாஷ் செயல்பாட்டை கண்காணித்துள்ளார். அப்போது அவர் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஆரணி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.




 


இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது 


அந்த மாணவி தினமும் பள்ளிக்கு வந்து செல்லும்போது ஆகாஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஆகாஷ் அந்த மாணவிக்கு காதல் வலை வீசி யுள்ளார். மாணவி பள்ளி முடிந்தவுடன் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளார். வழியில் நின்று இருந்த ஆகாஷ் மாணவியின் கையைப் பிடித்து இழுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கையை உதறிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆகாஷ் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பெயரில் ஆய்வாளர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.