கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தாளாளர்   ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, ஆகஸ்ட் 26ம் தேதி  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் எனவும், இரு ஆசிரியைகளும் சேலம் செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

 

நான்கு வாரங்களுக்கு பின், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

 

முதல் நான்கு வாரங்கள் நிபந்தனையை பூர்த்தி செய்த நிலையில், தற்போது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடும்படி நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளார்.


 



மற்றொரு வழக்கு
















டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான  விசாரணை தள்ளிவைப்பு

 

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான  விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 11ம் தேதிக்கு  தள்ளிவைத்துள்ளது.


 

நிலப் பிரச்னை தொடர்பாக  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 

இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், 

என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு  மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம்,   வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

 

இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் இன்று இறுதி விசாரணைக்கு வந்தன. 

 

 அப்போது, வழக்கில் தண்டிக்கப்பட்டவர் தரப்பில்,  இறுதி விசாரணைக்கு தேதி நிர்ணயித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

 

ஆனால், நீண்ட நாளைக்கு தள்ளிவைக்க கூடாது என காவல் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.