காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் , சென்னை மாணவி மீது தாக்குதல் நடத்திய சினிமா ஏஜென்ட் கைது.

Continues below advertisement

கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண் இன்ஜினியரிங் மாணவி. குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமா துறையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, சினிமா படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து தரும் ஏஜன்டான ரிஷிவிக்ரமன் ( வயது 26 ) என்பவர் பழக்கமாகி உள்ளார். கடந்த நான்கு மாதங்களாக அவரை காதலித்து வந்தார்.

பின் அவரது நடவடிக்கை சரியில்லாததால், மாணவி பேசுவதை தவிர்த்து விட்டார். இந்த நிலையில், கடந்த 25 - ம் தேதி அப்பெண் வீட்டிற்கு செல்ல மதுரவாயல் அணுகு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த ரிஷிவிக்ரமன், மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய ரிஷிவிக்ரமன் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

Continues below advertisement

இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ராயபுரம், கிரேஸ் கார்டனைச் சேர்ந்த ரிஷிவிக்ரமனை கைது செய்தனர்.

பேருந்து நிலையத்தில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு

சென்னை குன்றத்துார் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். இதை பார்த்த பயணியர் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்துார் போலீசார், அந்த இளைஞரை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் குன்றத்துார் அருகே உள்ள சிறுகளத்துார் பகுதியை சேர்ந்த ஆகாஷ், ( வயது 21 ) என்பதும், தன் தாயிடம் சண்டையிட்டதால் மது போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டதும் தெரிய வந்தது. மருத்துவனையில் சிகிச்சை பெற்ற ஆகாஷ் பின் வீடு திரும்பினார்.

கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் 2001 - ம் ஆண்டு ரகு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பன் தாஸ் , திலீப் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2003 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கின் விசாரணை முடிவில் அப்பன்தாஸ் ,  திலீப் செந்தில் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி, ஜாமினில் வெளியே வந்த அப்பன்தாஸ் தலை மறைவானார். அவரை ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு உட்பட பல்வேறு காவல் குழுக்கள் 20 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்நிலையில் தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் பகுதியில் அப்பன்தாஸ் ( வயது 45 ) பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.