சவுதி அரேபியாவில் இருந்து மலேசியாவுக்கு, 278 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த இந்தோனேசியா நாட்டு பயணி ஒருவருக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில், அவசரமாக தரையிறங்கியது.

 

சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று மாலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் 278 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் நேற்று இரவு சென்னை வான்வெளியை கடந்து கொண்டு இருந்தபோது, இந்த விமானத்தில் பயணித்த இந்தோனேசியா நாட்டுச் சேர்ந்த பயணி, புஹாரி DT ஜிண்டோ (64)  என்பவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் விமானத்துக்குள் துடித்தார். இதை அடுத்து விமான பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமான கேப்டன், விமானத்தை ஏதாவது ஒரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி, அந்தப் பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

 

அப்போது சென்னை விமான நிலையம் அருகில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து தலைமை விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, ஒரு பயணிக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அங்கிருந்து, விமானத்தை உடனடியாக சென்னையில் தரையிறங்க அனுமதி ப்பதோடு, பயணிக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் செய்யும்படியும் கூறினர்.

 

அதன்பின்பு, ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 10:30 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பயணியை பரிசோதித்தனர். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருப்பது தெரிய வந்தது. ஆனால் அந்த இந்தோனேசியா நாட்டுப் பயணிக்கு இந்தியாவில் இறங்குவதற்கு விசா இல்லை. இதனால் அந்தப் பயணியை விமானத்தை விட்டு உடனடியாக கீழே இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை அறிந்த சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மனிதாபிமான அடிப்படையில், இந்தோனேசிய நாட்டு பயணிக்கு அவசரகால மருத்துவ விசா வழங்கினர்.

 

அதன்பின்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், இந்தோனேசிய நாட்டுப் பயணி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதோடு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கிடையே ஏர் ஏசியா விமான கேப்டன், இந்தோனேசிய நாட்டுப் பயணி, அவசர மருத்துவ சிகிச்சைக்காக, இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையத்தில் இறக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை, இந்தோனேசியா நாட்டு தூதரகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தினார்.  அதன்பின்பு அந்த ஏர் ஏசியா விமானம், 277 பயணிகளுடன் இரவு 11:50 மணிக்கு, சென்னையில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது.