தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி அசானி புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இன்று பிற்பகலுக்குள் விசாகப்பட்டினம் – காக்கிநாடு இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி புயல் வலுவிழந்த புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


புயல் கரையை கடக்கும்போது ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மேற்கு வங்காளத்தின் தென்பகுதியில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இந்த புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேலும் வலுவிழக்க உள்ளது.




ஆந்திரா நோக்கி நகரும் அசானி புயல் பின்னர் ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டிலும் நேற்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னையில் நேற்று காலையில் கனமழை வெளுத்து வாங்கியது.


இன்று அசானி புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 8 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ஆகும். 9 விமானங்கள் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் ஆகும். விசாகப்பட்டினம் விமானங்கள் 6, விஜயவாடா 4 விமானங்களும், ஹைதராபாத் 2  விமானங்களும், ராஜமுந்திரி 2 விமானங்களும்,பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா தலா ஒரு விமானங்கள் வீதம் மொத்தம் 17 விமானங்கள் ரத்து என்று இதுவரை  அறிவிக்கப்பட்டுள்ளது.




அசானி புயல் காரணமாக விமானங்கள் ரத்து தொடர்பாக பயணிகளுக்கு நேற்று இரவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்றும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண