செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த இயக்குனர் கார்த்திக் ராம்  இயக்கத்தில் பிஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”. பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம். அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட  விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த குறும்படம் விருதுகளை பெற்றுள்ளது.



 

பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். ‘சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும். அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும் எனக் கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் ராம் 

 



 

இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் ராம் மேலும் கூறுகையில், "சிறந்த திரைக்கதைக்கு 237 விருதுகள், சிறந்த கதை காலத்திற்கு 72 விருதுகள், சிறந்த குறும்படம் என 80 விருதுகள், சிறந்த இயக்குனக்கான 39 விருதுகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விருதுகளை பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். பெண்களுக்கு எதிராக பல ஆண்டு காலமாக நடந்து வரும் கொடுமையை, குறும்படமாக எடுத்தது மட்டுமில்லாமல் தற்பொழுது அதை முழு நீள திரைப்படமாகவும் எடுத்து உள்ளோம். முழு நீள திரைப்படம் தற்பொழுது ஷூட்டிங் முடிந்து, விரைவில் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள்  நடைபெற உள்ளது" என்றார். மேலும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டம் வைத்திருப்பதாகவும் இயக்குனர் ராம் நம்மிடம் தெரிவித்தார்.  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராம் இந்த சாதனையை படைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.