வட தமிழகத்தில் நடந்த கொடுமை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், செய்யாறு, வந்தவாசி, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் டிரேடிங் என்ற பெயரில் பல முகவர்கள் பொதுமக்களிடம் முதலீடு செய்யுமாறு அழைத்து வந்தனர் . அதாவது ஒரு ரூபாய் கொடுத்தால், உலகமே உங்களுக்கு சொந்தம் என கூறும், அளவிற்கு லாபம் இருப்பதாக கூறி, மக்களிடம் லட்சக்கணக்கில் வாங்கி குவித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு முகவரும் கோடிக்கணக்கில், பொது மக்களிடம் முதலீடுகளை பெற்றனர். ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 30 ஆயிரம் என ஆபர்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தது அந்த நிறுவனங்கள். அந்த நிறுவனங்களில் பெயர்தான் ஆருத்ரா மற்றும் ஐஎப்எஸ்.
ஆருத்ரா, ஐஎஃப்எஸ்
இந்த இரண்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களிடமிருந்து , பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு ஓடி தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து , அந்தந்த மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கிய நாளில் இருந்து, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முதலீடு செய்து ஏமாந்திருப்பதை காவல்துறையினருக்கு புகாராக அளித்து வந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் வட தமிழகத்தில் கடந்த சில வருடங்களில், பத்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று ஏமாற்றி இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மொட்டை போஸ்டர்
தற்பொழுது தான் இந்த ஏமாற்று செயல் நடந்து முடிந்தது போல் இருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் மற்றொரு நிறுவனம் ஆபர்களை அள்ளி வீசி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் இயங்கி வரும் பிரபல நிறுவனம் பெயரில், இந்த ஆஃபர்கள் அள்ளி வீசப்பட்டுள்ளது. இந்த பிரபல நிறுவனமானது போக்குவரத்து, நிதி நிறுவனம், ஹோட்டல், ரியல் எஸ்டேட், உள்ளிட்ட பல இடத்தில் முதலீடு செய்துள்ளது .
4 சவரம் , 8 சவரன்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில், மொட்டை கடுதாசி போல், மொட்டை போஸ்டர் ஒன்று போடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், 100 ரூபாயிலிருந்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. தீபாவளி சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தில்லுமுல்லு சேமிப்பு திட்டத்தை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது மாதம் நூறு ரூபாய் கட்டினால், இறுதியில் 15 பொருட்கள் கொடுக்கப்படும் எனத் துவங்கும் அந்த விளம்பரத்தில், மாதம் 10,000 அல்லது ஒரே தவணையாக ஒரு லட்சம் கட்டினால், இறுதியில் நான்கு சவரன் நகை, 600 சதுர அடி மனை பிரிவு, மூக்குத்தி, கம்பல் மோதிரம், பட்டாசு பாக்ஸ் ,ஸ்வீட் என கொடுக்கப்படும் என பட்டியில் நீளுகிறது. இதில் உச்சபட்சமாக மாதம் 20 ஆயிரம் அல்லது ஒரே தவணையாக 2 லட்சம் ரூபாய் செலுத்தினால், 8 சவரன் நகை மற்றும் 1200 சதுர அடி வீட்டுமனை , மோதிரம், பட்டாசு பாக்ஸ் என பதினைந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட அதிர்ச்சி சம்பவம் என்றால் அந்த நிறுவனத்திற்கு உள்ளே ஏராளமான பொதுமக்கள் காத்துக் கிடந்து லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பல முகவர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து முதலீடு செய்கின்றனர். ஒரு முகவர் 20 நபர்களை சேர்த்து விட்டால், மற்றொரு முகவர் 50 நபர்களை சேர்த்து விடுகிறார், இப்படியே போட்டி போட்டுக் கொண்டு இந்த நிதி நிறுவனத்திற்கு ஆள் பிடிக்கின்றனர். இப்படி ஆள் பிடித்து தரும் முகவர்களுக்கு சிறப்பு சலுகை தரப்படும் என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பேடிஎம், ஸ்வைப்பிங் மெஷின்
இந்த நிறுவனம் சார்பில் வந்தவாசி, மாங்கால் கூட்ரோடு, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில், கூகுள் ப்ளே, பேடிஎம், ஸ்வைப்பிங் மெஷின் உள்ளிட்டவை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிறுவனம் கடந்தாண்டு சிறிய அளவில் சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் பல லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இதை முதலீடாக வைத்துக் கொண்டு, தற்பொழுது சாத்தியமே இல்லாத அறிவிப்பை வெளியிட்டு, பொதுமக்களிடம், சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் நிதியை வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்யப்படும் பணத்திற்கு, முறையாக எந்தவித ரசிதும் கொடுக்கவில்லை, பேருந்து சீட்டு போல ஒரு சிறிய துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கின்றனர்.
விசாரணை நடத்தப்படும்
தற்பொழுது தான் பொதுமக்களிடம் ஆசை தூண்டி பல ஆயிரம் கோடி, முதலீடு நிறுவனங்கள் ஏமாற்றி இருக்கும் நிலையில், தற்போது அதே பாணியில் மற்றொரு நிறுவனம் இறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று அதிக அளவு பணமும் கொடுக்க முடியாது, இதுகுறித்து அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.