கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 19 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் 2021-22-ஆம் கல்வியாண்டில் இளநிலை முதலாமாண்டு பிரிவில் 1,329 மாணவ மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி மாணவர் சேர்க்கைக்காக 9,671 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அரசு வழிகாட்டுதலின்படி, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் www.pacc.in என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விண்ணப்பித்த அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மற்றும் செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதற்காக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவ- மாணவிகளை சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைத்து கலந்தாய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 250 முதல் 299 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்றதால் காலை முதல் கடலூர், கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கொண்டிருந்தனர். இதில் கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் மொத்தம் 285 இடங்களுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். ஒரு கட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவ மாணவிகள் பலர் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது. மேலும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ள திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் இன்று 27 முதல் 31ஆம் தேதி வரை அறிவியல் பிரிவினருக்கும், வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி மொழி பாடங்களுக்கும், செப்டம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரை கலையியல் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு 7ஆம் தேதி அறிவியல் பிரிவினருக்கும், 8ஆம் தேதி இதர பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்த அனைவரையும் அழைக்காமல் கட் ஆப் மதிப்பீட்டில் அழைக்கப்பட்டிருந்தாலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
கடந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டதால் பிளஸ்-2 படித்த மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பம் செய்த அனைவரைக்கும் கடலூர் பெரியார் அரசு கல்லூரி நிர்வாகம் கலந்தாய்வுக்கு வர மின்னஞ்சல் அனுப்பபட்டதால் இன்று காலையில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்தாய்வுக்கு குவிந்துள்ளனர். கட் ஆப் மதிப்பீட்டில் அழைத்தது குறித்து தெளிவாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தாள் இவ்வளவு பேர் இங்கு வந்திருக்க மாட்டார்கள் என குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் கலந்தாய்வுக்கு அழைப்பு கொடுக்கபடும் போதே எவ்வுளவு மாணவ மாணவிகள் கலந்தாய்வுக்கு வருவார்கள் என கல்லூரி நிர்வாகத்திறக்கு தெரியும் ஆனால் வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கவும், முக்கவசத்தை அனிய கூறியும் ஏற்படுத்தவில்லை, மேலும் மாணவ மாணிவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்துள்ளது அவர்கள் காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தனர் அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யவில்லை தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். மேலும் நிற்க கூட இல்லாததால் வெயிலிலே காத்திருந்தனர்.