TNHB Flats: எண்ணூர் பகுதியானது தொழில்துறை பயன்பாட்டிற்காகவே சிறப்பு மற்றும் அபாயகரமான மண்டலமாக வகைப்படுத்தப்பட்டதால், திட்டம் அதன் முன்மொழிவிலிருந்தே எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.
எண்ணூர் அடுக்குமாடி குடியிருப்புகள்
சென்னையின் வடக்கு முனையில் உள்ள எர்ணாவூரில் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் (ETPS) முன்மொழியப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு நேர் எதிரே, நகர்ப்புற ஏழைகளுக்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் (TNHB) ரூ.1,168 கோடியில் கட்டப்பட்ட 6,877 சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட, ஒரே மாதிரியாக 13 அடுக்குகளை கொண்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 30,000 பேர் வசிக்கும் வகையிலான இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், நகர மையப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களை ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் இருந்து வெளியேற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டே அரசின் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பணிகள் முடிவடைந்த போதிலும், அவற்றில் இன்னும் பயனார்கள் குடியேறவே இல்லை.
பேட்ச் வொர்க் தீவிரம்:
கட்டிடங்கள் ஏற்கனவே மோசமடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பல இடங்களில் சுவர் பரப்புகளில் விரிசல்கள் காணப்படுவதாகவும், தொழிலாளர்கள் வெளிப்புறச் சுவர்களில் ஒட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல குடியிருப்புகளுக்குள், விரிசல்களை பூச வெள்ளை சிமென்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் உள்ளே சென்று பார்த்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நிலுவையில் உள்ள "மின்சாரம் மற்றும் நீர் வழங்கல்" பணிகளால் பயனாளர்கள் அங்கு வரவில்லை என கூறப்பட்டாலும், சுற்றுச்சூழல் கவலைகள் நிலவும் ஒரு இடத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தைத் திட்டமிடுவது நியாயமா எனவும் கேள்விகள் தொடர்கின்றன.
முதல்முறையாக..!
இடத்தை தேர்வு செய்தது மட்டுமின்றி, PMAY-U (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம்) திட்டத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) நோடல் ஏஜென்சியாக இருக்கும் சூழலில், TNHB இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பது ஆச்சரியமளிக்கும் விதமாகவும் உள்ளது. TNHB சில இடங்களில் PMAY-U திட்டத்திற்காக சில இடங்களை பரிந்துரைத்து இருக்கலாம், ஆனால் இந்த அளவிலான திட்டத்தை வாரியம் மேற்கொள்வது அரிதானது, இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி..!
இந்த திட்டம் 2017 ஆம் ஆண்டு அதன் முன்மொழிவின்போதே எதிர்ப்பைச் சந்தித்தது. மாசுபாடு பிரச்னைகள் காரணமாக பொதுமக்களிடமிருந்து மட்டுமின்றி, "சிறப்பு மற்றும் அபாயகரமான மண்டலம்" என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த பிற அரசுத் துறைகளிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்தது.
இந்தத் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று வீட்டு வசதி வாரியம் விரும்பியபோது, அனல் மின் நிலையம் விரிவாக்கம் செயல்படுத்தப்பட்டவுடன் அங்கு மாசுபாடு தொடர்பான அபாயங்கள் ஏற்படக்கூடும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஒரு பெரிய குடியிருப்பு வளாகம், குறிப்பாக சுற்றுச்சூழல் அனுமதி நீட்டிப்புடன் அமைவது அனல் மின் நிலைய திட்டத்திற்கு தடைகளை உருவாக்கக்கூடும் என்று தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL) எச்சரித்துள்ளது ஆனாலும், அனல் மின் நிலைய ஊழியர் குடியிருப்புகள் மற்றும் அருகிலேயே சில குடியிருப்பு கட்டிடங்கள் வருவதை முதன்மையாகக் காரணம் காட்டி, 2018 நவம்பரில் CMDA ஒப்புதல் அளித்துள்ளது.
வெளியேற காத்திருக்கும் குடும்பங்கள்
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பேசுகையில், “பழைய அனல்மின் ஆலையம் செயல்பாட்டில் இருந்தபோது சாம்பல் மற்றும் புகை வெளியேற்றம் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் தலைவலியாக உள்ளன. பல குடும்பங்கள் ஏற்கனவே குடியிருப்புகளை காலி செய்துவிட்டன. ஊழியர்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களும் வெளியேறிவிடுவார்கள். TNHB அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கப் போகிறவர்களைப் போல, நாங்கள் இங்கு நிரந்தரமாக வசிக்க விரும்பவில்லை” என தெரிவிக்கின்றனர்.
மேலும், ஊழியர் குடியிருப்புகள் இரண்டு மாடி கட்டமைப்புகள் மட்டுமே. ஆனால், தமிழ்நாடு சுகாதார வாரிய குடியிருப்புகள் 13 அடுக்குகளை கொண்டுள்ளன. இதனால் அனல் மின் நிலைய விரிவாக்கம் தொடர்ந்தால் மாசுபாட்டின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
உடல்நலப் பிரச்னைகள்:
வல்லூர் அத்திப்பட்டில் ஒரு மின் உற்பத்தி நிலையம் உட்பட, மின் உற்பத்தி நிலையங்களால் சூழப்பட்ட எண்ணூரில் புற்றுநோய் ஏற்படும் அபாரம் நிலவுவதாக கூறப்படுகிறது. சில நேரங்களில், கரையோரமாக சாப்பிடும்போது, தொழிற்சாலைகளில் இருந்து சாம்பல் எங்கள் உணவில் விழுகிறது என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எண்ணூர் போன்ற இடத்தில் இதுபோன்ற ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் நீண்டகால தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மற்றொரு அதிகாரி ஒப்புக்கொண்டார்.
குடியிருப்பின் விலை என்ன?
எர்ணாவூர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் விலை சுமார் ரூ.17 லட்சம் என்று கூறப்படுகிறது. இது TNUHDB முன்பு கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை விட சற்று அதிகம். மத்திய அரசு ரூ.1.5 லட்சத்தை மானியமாகவும், மாநில அரசு ரூ.12 லட்சத்தையும் வழங்க, மீதமுள்ள ரூ.3.5 லட்சத்தை பயனாளிகள் ஏற்க வேண்டும். இதுதொடர்பாக பேசும் TNUHDB இன் நிர்வாக இயக்குநர் அன்ஷுல் மிஸ்ரா, TNHB இன்னும் அதிகாரப்பூர்வமாக அடுக்குமாடி குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை. அது ஒரு மாதத்திற்குள் நடக்கும். அதன் பிறகு பயனாளர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடைமுறை தொடங்கும்” என்றும் குறிப்பிட்டார்.