சென்னை மாவட்டம் பார்க் டவுனைச் சேர்ந்த முதியவர் தாமோதரன். இவர் கடந்த 5 ஆம் தேதி இரவு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்து வந்த நபர் , முதியவர் தாமோதரனிடமிருந்து  செல்ஃபோனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் தாமோதரன், தனது செல்ஃபோனைப் பறி கொடுத்து விட்டதாக கத்தி கூச்சலிட்டார். 


அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த வழியாகச் பேருந்தில் பயணித்து சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் இந்திராணி, முதியவர் கூச்சலிடுவதை கண்டார். இதனை அடுத்து பெண் காவலர் இந்திராணி உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி செல்ஃபோன் திருடனைத் துரத்திச் சென்றார். 


பிறகு செல்போன் திருடனை துரத்திச் சென்று,  பொது மக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தார். தொடர்ந்து திருடனை  C1 பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 







இதுகுறித்து, சென்னை கமிஷனர் ட்விட்டர் பக்கத்தில், "பூக்கடை பகுதியில் முதியவரிடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற குற்றவாளியை, துரத்திச்சென்று பிடித்து ஆயுதப்படை பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்" என பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியை  சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணையின் போது, அவரிடமிருந்து 1 செல்ஃபோன் கைப்பற்றப்பட்டது. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை துரிதமாக செயல்பட்டு பிடித்த,  ஆயுதப்படை பெண் காவலரை பலரும் பாராட்டினர்.


அதுமட்டுமின்றி அப்பெண் காவலரை சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அலுவலகத்திற்கு, நேரில் அழைத்துப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் கொடுத்து கவுரவப்படுதினார். தனக்கேன் வம்பு என போலீசார் ஒதுங்கிச் செல்லும் இந்த காலத்தில், பெண் போலீஸ் ஒருவர் திருடனை துணிவுடன் விரட்டிச் சென்ற சம்பவம், பலரின் பாராட்டை பெற்றுள்ளது.