கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

 

கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர கைது செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

 

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வழக்கறிஞர் பி. ரத்தினம் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல என்றும், விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்ற தனி நீதிபதி கருத்தும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்திருந்தனர்.

 

இந்த கடிதம் குறித்து பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தங்கள் கோரிக்கை மனுவை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

 

ஆனால் நீதிபதிகள், ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ளதாக குறிப்பிட்டதுடன், அவற்றை வழக்காக விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் ரத்து கோரிக்கையையும் தாமாக முன் வந்து வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், கோரிக்கை மனுவை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.



 

 


மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கு



 

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2020 - 21ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

அதனால் மாற்று திறனாளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
  

 

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்