சென்னை மாநகராட்சி அரசு மாணவிகளுக்கு நிர்பயா (Nirbhaya) நிதியின் மூலம் முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்க நிதியில் செயல்படும் நிர்பயா திட்டத்தின் கீழ் தலைமைச் செயலர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள Apex Committee வாயிலாக 2022-2023ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதில், ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது.. வரி விதிப்பு, நிதிக்குழு தலைவரான 41ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வு குறித்து பேச மேயர் பிரியா அனுமதி கொடுக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் பட்ஜெட் உரையில், சென்னையில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சம்களுக்கு மேலாக உள்ளது. 15 மண்டலங்களில் 3 வட்டார அலுவலகங்களாக ஒருங்கிணைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளயில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும். பள்ளி மாணவர்கள் திறனை மேன்படுத்த 40 லட்சம் செலவில் கண்காட்சிகள் நடத்தப்படும். 2022-2023 ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 1.86 கோடியில் இணைய சேவை வழங்கப்படும். சென்னை மாநகராட்சி பள்ளியில் 5.47 கோடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்