பாமக இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி திருமால்பூர் பகுதியில் பாமக செயல்பாட்டாளர்கள் இரண்டு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் 21 வயதான தமிழரசன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தமிழரசனின் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்
21 வயதே ஆன தமிழரசன் நல்ல துடிப்பான இளைஞர். அவரை இழந்து இருப்பதால் மிகவும் வேதனையோடு இருக்கிறோம். பெட்ரோல் ஊற்றி கொளுத்துகிற அளவுக்கு தைரியம் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு இருக்கிறது. இன்னொரு இளைஞர் உயிருக்கு போராடக்கூடிய நிலையில் தான் இருக்கிறார்.
இச்சம்பவம் ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் கிடையாது. வட தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஒரு சில தலைவர்களின் தூண்டுதலின் பேரில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அத்துமீறு , அடங்க மறு, திருப்பி அடி , சட்டம் - ஒழுங்கு சீர்கேடு
இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளுங்கள் படியுங்கள் வேலைக்கு செல்லுங்கள் என்று தான் எங்களது இளைஞர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சில இயக்க தலைவர்கள் அத்துமீறு, அடங்க மறு, திருப்பி அடி என்றெல்லாம் வழி நடத்துகிறார்கள். இதனால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு இப்படி ஒரு கொடூரமான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் காவல் துறையின் கையாலாகாத தனம்.
கைது செய்யப்பட்ட ஆறு நபரில் ஒருவர் விசிக உறுப்பினர் மற்றவர்கள் விசிக ஆதரவாளர்கள். தொடர்ந்து திருமால்பூரில் கஞ்சா விற்பதும் சமூக விரோத செயல்களை செய்வதும் தான் இந்த ஆறு இளைஞர்களின் வாடிக்கை. இந்த சம்பவமும் கஞ்சா போதையில்தான் நடந்திருக்கிறது. முதலமைச்சர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
என்ன நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது தமிழ் நாட்டில் ?
தமிழரசனின் தந்தை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற கொடூரமான முறையில் தலையில் அடிக்கப்பட்டு இறந்திருக்கிறார். அடுத்து தமிழரசன் இறந்திருக்கிறார். என்ன சட்டம் என்ன நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது தமிழ் நாட்டில் ?
முதலமைச்சர் உடனடியாக தமிழரசனுடைய குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழரசன் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் லாபத்திற்காக அல்ல.
இரண்டு சமுதாயத்தை அடித்துக் கொள்ள விட்டு அதை வைத்து ஓட்டு வாங்குவதா திராவிட மாடல் அரசு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடைபெறாமல் பார்ப்பது முதலமைச்சரின் கடமை. உடலை வாங்குவதும் வாங்காததும் அந்த குடும்பத்தின் உடைய விருப்பம். முதலமைச்சர் இதில் தலையிட்டு வேகமாக முடிவெடுத்தார் என்றால் இதற்கு ஒரு தீர்வு வரும் என்றார்.