சென்னை வியாசர்பாடி தேபர் நகர் 10 ஆவது தெருவை சேர்ந்தவர் சூர்யா (32). இவர் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கு அதிக குடிப்பழக்கம் உள்ளது என கூறப்படுகிறது. இவரது அண்ணன் விஜயகாந்த் என்பவர் தனியாக வீடு எடுத்து சூர்யாவை தங்க வைத்துள்ளார். தேவைப்படும் போது பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். சூர்யாவுக்கு பாரிமுனை பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (37) மற்றும் பெரியபாளையத்தை சேர்ந்த தினேஷ் (30) என்ற இரு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி சூர்யா வீட்டிற்கு வந்து மது அருந்துவது வழக்கம். அதே போன்று இருவரும் வந்து சூர்யா வீட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது சூர்யா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து முரளிகிருஷ்ணனின் அண்ணன் சசி குமார் என்பவரிடம் பணம் கேட்டு வாங்கி தருமாறு கூறி உள்ளனர்.
அதற்கு முரளி கிருஷ்ணா என்னால் முடியாது என்று கூறியுள்ளார். அப்போது முழு மது போதையில் இருந்த சூர்யா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து முரளி கிருஷ்ணனை அடித்துள்ளனர். அதன் பிறகு தினேஷ் வீட்டிற்குச் சென்று விட்டார். சூர்யா மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகிய இருவரும் வீட்டிலேயே தூங்கி விட்டனர். முரளி கிருஷ்ணன் எழுந்து எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று சுத்தி வாங்கியுள்ளார். அதை சூர்யா வீட்டிற்கு எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவை தட்டி எழுப்பி உள்ளார். அப்போது என்னை இருவரும் சேர்ந்து ஏன் அடித்தீர்கள் என கேட்டுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த சூர்யாவை கையில் இருந்த சுத்தியை எடுத்து ஓங்கி சூர்யா தலையில் பலமாக முரளி கிருஷ்ணா அடித்துள்ளார். அப்போது சூர்யா சம்பவ இடத்திலேயே துடி துடித்து மயக்கமடைந்தார். அதன் பிறகு முரளி கிருஷ்ணா அங்கிருந்து கிளம்பி விட்டார். சிறிது நேரம் கழித்து சூர்யாவின் அண்ணன் விஜயகாந்த் சூர்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சூர்யா ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற எம்.கே.பி நகர் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பாரிமுனை பகுதியில் பதுங்கியிருந்த முரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.
கைது செய்யபட்ட முரளி கிருஷ்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முரளி கிருஷ்ணா அடிக்கடி அவரது அண்ணன் சசிகுமாரை மிரட்டி பணம் வாங்கி உயிரிழந்த சூர்யாவிற்கு மது வாங்கிக் கொடுத்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று சூர்யா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சசிகுமாரிடம் பணம் கேட்டு வாங்கி வரச் சொல்லி தகராறில் ஈடுபட்டதால் போதையில் கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன் மீது கொத்தவால்சாவடி பகுதியில் கொலை வழக்கு உள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுபோதையில் நண்பரையே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.