சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் அமுதம் அங்காடிகள் விரிவு படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது. தனியார் டிபார்ட்மெண்ட் கடைகளின் போட்டியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் வெளிச் சந்தையில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட முக்கியமான மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு மொத்தப் பண்டக சாலைகள் மூலம், பல் பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. ’செல்ஃப் சர்வீஸ்’ முறையில் இயங்கும் இந்த அங்காடிகள் அமுதம் அங்காடிகள் என்று அழைக்கப்படுகின்றன. பிற கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மொத்த பலசரக்குக் கடைகள் லாப கரமாக இயங்கி வந்தாலும் அமுதம் அங்காடிகளால் அந்த அளவுக்கு லாபமாக இயங்க முடியவில்லை. 


குறைந்த விலையில் விற்பனை


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, அமுதம் என்ற பெயரில் சுமார் 115 பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இவை நீண்ட காலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. 


சென்னையில் கோபாலபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமுதம் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்காடிகள் நகரின் மத்தியில் இருந்தாலும் குறைந்த இடத்தில், இட நெருக்கடியில் செயல்பட்டு வருவதாகவும் அங்கு விற்கப்படும் பொருட்களில் குறைபாடு இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் அமுதம் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் டிபார்ட்மெண்ட் கடைகளின் போட்டியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


படிப்படியாகப் புதுப்பிப்பு


இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறும்போது, ''முன்னோடித் திட்டமாக இந்தப் பணி நடைபெறும். பிற கடைகளும் விரைவில் படிப்படியாகப் புதுப்பிக்கப்படும்.  சென்னை அமுதம் அங்காடிகளில் வேகமாக விற்பனை ஆகும் பொருட்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இந்த அங்காடிகளின் அலுவலக மேலாண்மையும் மேம்படுத்தப்படும். இதன்மூலம் பொது மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், அமுதம் அங்காடிகள் மாற்றி அமைக்கப்படும்'' என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 


மேம்பாட்டு நடவடிக்கை


தினந்தோறும் காலை 9 மணி முதல் திறக்கப்படும் அமுதம் அங்காடிகள், மதியம் 12.30 மணி வரை செயல்படும். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்குத் திறக்கப்படும் கடைகள் இரவு 11 மணி வரை இயங்கும். இந்த நிலையில் விரைவில் அதிகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும் அதற்குக் குத்தகை முறையில் ஆட்களை ஒப்பந்தம் செய்யவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூ.35 லட்சம் செலவழிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..