செங்கல்பட்டு மாவட்டம் கேகே நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் மகன் விஜயகுமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். தன்னுடைய பணி நிமித்தம் காரணமாக, அதே நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வரும், அஜித், தர்மதுரை , ராஜா ஆகிய நான்கு நபர்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் நகர் பகுதியில், வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார்.
ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் விஜயகுமார் தனது முதலாளியிடம் அஜித் சரியாக வேலை செய்வதில்லை என புகார் தெரிவித்து வந்ததுள்ளார். இதனால் அஜித்திற்கும் விஜயகுமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி சண்டைகளும் ஏற்பட்டுள்ளது . நேற்று நள்ளிரவு வழக்கம் போல அஜித் ராஜா மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒன்றாக வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். அப்பொழுது இரவு ஒரு மணி அளவில் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அஜித்திற்கு போன் செய்து, ஃப்ரீசர் பாக்ஸ் எடுத்துச் சென்று நெம்மேலி அருகே உள்ள பொல்லேரி கிராமத்தில் வைத்து வரும்படி கூறியுள்ளார். சுமார் 2 மணி அளவில் அஜித் திரும்பி வந்து பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் அடிபட்டு விஜயகுமார் இருந்துள்ளார்.
உயிரிழந்த விஜயகுமார் அருகில் போதையில் ராஜா உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து செங்கல்பட்டு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராஜா, அஜித் தர்மதுரை ஆகிய மூன்று பேரிடம் காவல்துறை தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக , நேற்று இரவு விஜயகுமாரிடம் சண்டையிட்டு உள்ளார். ஒருகட்டத்தில் சண்டை முற்ற, அப்பொழுது அஜீத் வீட்டிற்கு வெளியே இருந்த உருளை கல்லை தலையில் தூக்கி போட்டு விஜயகுமாரை கொலை செய்துவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்