இலங்கையிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.40 லட்சம் மதிப்புடைய, சந்தனத்தை விட அதிக நறுமணம் கொடுக்கக்கூடிய அகில் மரக்கட்டைகள், உயர்ரக வாசனை திரவியமான அத்தர் ஆயில் பாட்டில்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. சூட்கேசுக்குள் மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்த, இலங்கை பயணிகள் 2 பேரை, சுங்க அதிகாரிகள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம்
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி விசாரித்தனர்.
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், சுற்றுலா பயணிகளாக, இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தனர். அவர்களை சந்தேகத்தில் நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். அதோடு அவர்கள் வைத்திருந்த பைகள் சூட்கேஸிலிருந்து, உயர்ரக வாசனை திரவியங்களின் நறுமனம் வீசியது. இதனால் சுங்க அதிகாரிகள் இரண்டு பேர் பைகள் மற்றும் சூட்கேஸை திறந்து பார்த்து சோதித்தனர்.
அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...
அவைகளுக்குள் சுமார் 20 பார்சல்கள் இருந்தன. அந்தப் பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது, சந்தனத்தை விட அதிக நறுமணம் தரக்கூடிய அகில் மரக்கட்டைகள் சுமார் 20 கிலோ இருந்தன. அதோடு மற்றொரு பையில், மிகவும் விலை உயர்ந்த அகர் அத்தர் ஆயில் பாட்டில்கள் 15 -க்கும் மேற்பட்டவைகள் இருந்தன.
இந்த அகில் மரம், சந்தன மரத்தை விட அதிக நறுமணம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரம். இதை வீடுகளில் வளர்ப்பது, சர்வதேச வன பாதுகாப்பு சட்டப்படி குற்றம். இந்த மரங்கள் இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளிலும், நாகா மழை காடுகளிலும், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அதிகமாக அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.
அகர் அத்தர் ஆயில் என்றால் என்ன ?
அதைப்போல் இந்த மரங்களில் இருந்து வடியும் பிசின்களில் அகர் அத்தர் ஆயில் கிடைக்கிறது. இந்த ஆயில் அதிக நறுமணத்துடன் கூடிய உயர் ரக வாசனை திரவியம். இது மிகவும் விலை உயர்ந்தது. உயர்ரக அகர்வத்திகள், வாசனை திரவியங்களான செண்டுகள், சாம்பிராணிகள், கொடிய விஷங்களை முறியடிக்கும் மருந்துகள் போன்றவைகள் தயாரிக்க இவைகளை பயன்படுத்துகின்றனர்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்திய போது, இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. மேலும் சர்வதேச வனத்துறையின் அனுமதி இல்லாமல், இவைகளை கடத்திக் கொண்டு வந்துள்ளனர் என்று தெரிய வந்தது.
மரக்கட்டைகள் பறிமுதல்...
அதோடு இலங்கை பயணிகள் இருவர் கொண்டு வந்திருந்த, இந்த அகில் வாசனை மரக்கட்டைகள், மற்றும் அபூர்வ வகை அதிக நறுமணம் கொடுக்கக்கூடிய அகர் அத்தர் ஆயில் ஆகியவைகளின் மதிப்பு இந்தியாவில் குறைவாக இருந்தாலும், சர்வதேச அளவில் இதன் மதிப்பு பன் மடங்கு அதிகம்.
எனவே இருவரும் கடத்தி வந்த இந்த பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.40 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவைகளை பறிமுதல் செய்ததோடு, கடத்தல் பயணிகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த நறுமண கட்டைகள், ஆயில்களை யாருக்காக கடத்தி வந்தனர்? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.