சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, பயணி ஒருவர், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதனால் விமானம், 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவில், சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது.
திறக்கப்பட்ட அவசரகால கதவு
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி, விமானத்துக்குள் ஒலித்தது. இதை அடுத்து விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.
தெரியாமல் செய்து விட்டேன்
உடனடியாக விமான பணிப்பெண்கள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி யார்? என்று விசாரித்தனர். அப்போது அவசரகால கதவு அருகே இருக்கையில் அமர்ந்திருந்த, மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் (45) என்ற பயணி தான், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றார் என்று தெரியவந்தது. இதை அடுத்து விமானி, அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்தப் பயணி, தெரியாமல் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி விட்டேன் என்று கூறினார். ஆனால் விமானி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
போலீசில் ஒப்படைப்பு
இதை அடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் பின்பு அந்த பயணியின் விமான பயணம் ரத்து செய்யப்பட்டு, பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதோடு அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
விமான பயணி மீது வழக்கு பதிவு
சென்னை விமான நிலைய போலீசார் மும்பை பயணி வருண் பாரத் மீது, விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியது, விமானத்துக்குள் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மும்பை செல்ல வேண்டிய இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 151 பயணிகளுடன், 2 மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள், தேவை இல்லாமல் அவசரகால கதவுகள் உள்ளிட்டவற்றை திறக்க கூடாது என்பது விதி உள்ளது. இந்தநிலையில் அதை மீறிய பயணி, தெரியாமல் செய்து விடடதாக கூறியது மட்டுமில்லாமல் விமானத்தில் இருந்த பணி பெண்கள் மற்றும் விமானியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இவர் மீது புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.