ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கான விமான டிக்கெட் 3 மடங்கு அதிகரித்து இருப்பது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரம்ஜான் கொண்டாட்டம்:


இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதேபோல் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை ஆகியவையும் ஒரே நேரத்தில் வந்து உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணி மற்றும் கல்விக்காக வசிப்பவர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். 


சொந்த ஊர் செல்ல ஆர்வம்:


இதற்காக ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்டன. கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வேறு வழியின்றி விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் தற்போது வழக்கத்தை விட சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


3 மடங்கு அதிகரித்த டிக்கெட் கட்டணம்:


பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விமானங்களில் கட்டணங்கள் 3 மடங்கு அதிகரித்து உள்ளது. இதைப்போல் டெல்லி, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது.


கட்டண விவரம்:


சென்னை-மதுரை வழக்கமான விமான கட்டணம்  3,419 ரூபாய். ஆனால் இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில், வழக்கமான கட்டணம் 3,675 ரூபாய் ஆகும். ஆனால் இன்று 11 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை-திருச்சி இடையே 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால்,  வழக்கமான கட்டணம்  2,769 ரூபாய்.  கோவைக்கு வழக்கமான கட்டணம் 3,313. இன்று ரூ. 5,500-ரூ. 11 ஆயிரம் கட்டணம் இருந்தது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.8500 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், கொல்கத்தாவுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விமான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.


மக்கள் அவதி:


பண்டிகை மற்றும் கோடை விடுமுறை நாட்களை சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், கட்டண உயர்வையும் கருத்தில் கொள்ளாமல் அதிகப்படியான கட்டணத்தை கொடுத்துபொதுமக்கள் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரம், பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் வேறு வழியின்றி தான் விமான சேவையை நாடியுள்ளோம். ஆனால், இங்கும் கட்டணத்தை உயர்த்தி பணம் கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.