அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

 

அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக கலவரம், சூறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும்  இதுவரை விசாரணையை தொடங்கவில்லை எனவும், குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சியளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், கடுமையான குற்றங்கள் இருந்தபோதிலும், விசாரணையைத் தொடங்குவதில் சிபிசிஐடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்கள் மீது தெளிவான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

 

திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும், தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றச் செயல் நடந்த இடத்தை புலனாய்வுக் குழு பார்வையிடாததால், பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறி, இதனால் ஆளும் ஆட்சிக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

 

தமிழக காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் தன்னிச்சையான விசாரணை குழு கேட்டதாகவும், முறையாக விசாரணை நடத்தாமல், காவல்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவது என்கிற தனது குற்றச்சாட்டுக்கு அதன் செயல்பாடின்மையே சான்றாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேற்கொண்டு சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி தகுந்து உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி தவறினால், வேறொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது கட்டாயமாகிறது என வலியுறுத்தி உள்ளார்.  

 

எனவே, அதிமுக தலைமை அலுவலம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்

 

இந்த கூடுதல் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


 



மற்றொரு வழக்கு

 

நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டதாக மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில்  உண்மையான விடைத்தாளை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

இதில் தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும் தான் விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

விடைத்தாளின் இடது புறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என மாணவி தனது சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 

விடைத்தாளில் உள்ள கைரேகையை சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர் சரவணன், விடைத்தாள் மாறியுள்ளது,மனுதாரரின் விடைத்தாள் கிடையாது,உண்மையான விடைத்தாளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தேசிய தேர்வு முகமை  சார்ந்த வழக்கறிஞர் நீட் தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதி    மாணவியின் உண்மையான விடைத்தாளை வரும் 13ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளார்.