அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வெயில் கொளுத்து, கொளுத்து என கொளுத்தியது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. குறிப்பாக மாநிலத் தலைநகர் சென்னையில் இன்று அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.


கடுமையான வெயிலுடன் வறண்ட காற்றும் நிலவியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதுதொடர்பான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூரிலும் அதை அடுத்துள்ள வேலூரிலும் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. இதனால் அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக வேலூரில் இந்த ஆண்டு அதிகமுறை வெயிலின் அளவு 100 டிகிரி ஃபார்ன்ஹீட்டுக்கு மேல் பதிவானது குறிப்பிடத்தக்கது. 


திருப்பத்தூரிலும் மதுரையிலும் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி சுட்டெரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்குள்ளானது. மேலும் நாகை மற்றும் பரங்கிப் பேட்டையில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 






திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு மற்றும் திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டின் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.