ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், விண்வெளிப்பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) ஏப்ரல் 2025 இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைகிறது.
ஏரோஸ்பேஸ் பூங்கா
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஏரோஸ்பேஸ் பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வடிவமைப்பு தொழில்களுக்கான மேம்பட்ட கணினி மற்றும் வடிவமைப்பு பொறியியல் மையத்தை (ACDEC) நிறுவவு உள்ளது. இந்த ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.
எவ்வளவு மதிப்பீடு ?
மேலும் வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதி கொண்டிருக்கும். ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாகும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த பூங்கா, 250 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.250 கோடியில் 5.54 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன ?
இங்கு, ஏவியோனிக்ஸ் வளாகம், சிறப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம் மற்றும் கிடங்கு வசதி ஆகியவற்றை ACDEC கொண்டிருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு TIDEL Park Ltd நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டிற்கு வருவதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், வருகின்ற ஏப்ரல் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், பொருளாதார ரீதியாக ஸ்ரீபெரும்புதூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழக அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தியில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், சிப்காட் ஏரோஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் ஏப்ரல் 2025-ல் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.