அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னதாக அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஓபிஎஸ் குறித்து அதிமுக அறிக்கை
இந்த ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கு முன்பே முடிவுற்றதாக முன்னதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை
முன்னதாக இன்று (ஜூன்.16) நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கூட்டம் முடிந்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ”அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23ஆம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும். அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18ஆம் தேதி மீண்டும் நடைபெறும். பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நகமும் சதையுமாக உள்ள ஓபிஎஸ் இபிஎஸ்
ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி குரல் எழுப்பி வரும் நிலையில், ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல நகமும் சதையும் போல ஒன்றாக இருப்பதாக பொன்னையன் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”ஒற்றைத்தலைமை குறித்த கேள்வியே தேவையற்ற ஒன்று. அந்த முடிவை பொதுக்குழு முடிவு செய்யும். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்கும். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஜோசியம் சொல்ல முடியாது. ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒன்றாகவே உள்ளனர்.
கூட்டத்தில் இருந்து யாரும் கோபமாக வெளியேறவில்லை. அதெல்லாம் உங்கள் கற்பனை. சிவி சண்முகம் திருச்சி செல்லவேண்டுமென்பதால் கிளம்பினார். ஜெயக்குமார் ஒரு மீட்டிங்கில் இருந்து வந்தார். மீண்டும் கிளம்பி சென்றார். இரட்டைத்தலைமை தொடருமா என்பதே தேவையற்ற கேள்வி” என்றார்.
அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து, ஓபிஎஸ் இன்றைய தினம் கிரீன்வேஸ் சாலையில் முன்னதாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.