அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக 4 மாவட்ட செயலாளர்கள் முன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் ஈபி.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீது என மொத்தம் 400 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 11 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல் மற்றும் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்ததாகவும், ஆனால் இந்த வழக்கில் தாங்கள் தவறாக இணைக்கபட்டுள்ளதாக மனுவில் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி விடுமுறை என்பதால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி தங்க மாரியப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கபட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அதுவரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை கைது செய்ய கூடாது என ராயப்பேட்டை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்