பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக சென்னை காவல்துறை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜாரானார். மீரா மீதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேற்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர்.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் மீரா மீதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதி நீதிபதி ஸ்ரீதேவி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்றதை எதிர்த்து புதுவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தற்போது உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாக கூறி, தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்ற உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் திமுக எம்.எல்.ஏ. சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை எந்த காரணமும் இல்லாமல் திரும்ப பெறப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை தேர்தல் ஆணையம் நடத்த முயற்சிப்பதால், அத்ற்கு தடை விதிக்கவேண்டும் என்று வாதிட்டார்.
புதுவை தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளதாகவும்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசாணை, துணை நிலை ஆளுநரின் அறிவுறுத்தலின்படியே திரும்ப பெறப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை அடையாளம் காண ,சம்பந்தப்பட்ட ஆணையத்தையும் வழக்கில் பிரதிவாதியாக சேர்த்து உத்தரவிட்டுள்ளது.