சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில், 30 வாரங்களே ஆன குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறவி டயாபிராக்மடிக் குடலிறக்கம் (சி.டி.எச்.) சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. குழந்தைகள் நலம் மற்றும் பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜி. மூர்த்தி தலைமையிலான குழுவினர் திறந்த தொரோகோடமி சிகிச்சையை செய்தனர்.



 

அறுவை சிகிச்சை குறித்து பச்சிளம் குழந்தைகள் பிரிவு முதுநிலை ஆலோசகர் டாக்டர் ஸ்ரீலா எஸ்.பாலியா, மகளிர், மகப்பேறு மற்றும் குழந்தையின்மை துறை தலைவர் மருத்துவர் பத்மப்ரியா விவேக் ஆகியோர் கூறியது:

 

பிறவி டாயபிராக்மடிக் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தொரோகோடமி அறுவை சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றியது நெகிழ்ச்சியான தருணமாகும். குழந்தையின் குடல், வயிறு, மண்ணீரல் ஆகியவை நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்ததால் குடலிறக்க பாதிப்பு என்பது இடது பக்க நுரையீரல் முழுமையாக வளரவில்லை. மேலும் வலது பக்கமாக இதயம் நகர்ந்ததால் அதில் ரத்த ஓட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு பல்வேறு வகையான பாதிப்பு இருந்தது. சுவாசிப்பதில் சிரமம், செரிமான பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு வாய்ப்பு அதிகம் என பல்வேறு பிரச்னை இருந்தது.

 

அதேபோல டயாபிராக்மடிக் குடலிறக்க பாதிப்பை சரி செய்வதில் பல்வேறு வகை சவால்கள் இருந்தது. குழந்தைகள் நலம் மற்றும் பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.மூர்த்தி மற்றும் மயக்க மருந்தியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சுமார் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து சரி செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு 10 நாள்கள் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த குழந்தை தற்போது போதிய செரிமான சக்தியை பெற்று, மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியே செல்ல தயாராக உள்ளது என்றார்.

 

குழந்தைகள் நலம் மற்றும் பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.மூர்த்தி கூறுகையில், குறை பிரசவ குழந்தைக்கு டயாபிராக்மடிக் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலாக இருந்தது. இதில் குடல், வயிறு, மண்ணீரல் ஆகிய உறுப்புகளை அடிவயிற்றில் உள்ளே தள்ளுவது மிக சவாலாக இருந்தது. மேலும் பல்வேறு சவால்கள் இருந்த நிலையிலும், எங்களின் மருத்துவக் குழுவினர் குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர். கர்ப்ப காலத்தில் முறையான நோயறிதல் மற்றும் முறையான பச்சிளம் குழந்தை சிகிச்சை மைய தேர்வும் இந்த சிகிச்சை வெற்றி பெற காரணமாகும் என்றார்.



 

5000 குழந்தைகளில் ஒருவருக்கு..

 

திருமணத்திற்குப் பின்னர் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு குறைபிரசவத்தில் 30 வாரங்களான குழந்தை 1.45 கிலோ எடையில் பிறந்தது. பிறவி டயாபிராக்மடிக் குடலிறக்க பாதிப்பு 25 வாரங்களில்  கண்டறியப்பட்டது. பின்னர் பெற்றோருக்கு போதிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில் 30 ஆவது வாரத்தில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. தொடர்ந்து வளர்ச்சி பெறாத நுரையீரலுக்கு ரத்த ஓட்டத்தை வழங்கிடும் வகையில் நைட்ரிக் ஆக்சைடு உடன் கூடிய வென்டிலேட்டரில் பராமரிக்கப்பட்டது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரித்திட போதிய மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. பிறவி டயாபிராக்மிடிக் குடலிறக்கத்தில், டயாஃபிரமில் (மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் நுரையீரல் சுருங்கி விரிய காரணமாக உள்ள தசை) உள்ள துளையால் குடல் மற்றும் அடிவயிற்று உறுப்புகள் மார்பு குழியில் செல்லும் பாதிப்பு என்பது 5000 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றார்.