சென்னை மக்கள் போக்குவரத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது மின்சார ரயில்கள், இந்த ரயில்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டும் பயணிகளின் வசதிக்காக ஏசியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.
பெட்டி தயாரிப்பு:
இதற்கான ஏசி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் தற்போது ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்தது. ஏசி ரயில்களை இயக்க கடந்த 2019 ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே இந்திய ரயில்வே வாரியத்திடம் பரிந்துரைத்திருந்தது. இதன் பிறகு சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் ஏசி மின்சார ரயிலின் 12 பெட்டிகள் தயாரிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கி நடைப்பெற்று வந்த நிலையில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளது.
1116 பேர் பயணிக்கலாம்:
இது குறித்து ஐசிஎப் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, "சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 12 பெட்டிகள் கொண்ட புதிய வகை ஏசி மின்சார ரயில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னைக்கு இரண்டு ஏசி மின்சார ரயில் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. தற்போது முதல் ஏசி மின்சார ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த ரயில் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் 12 பெட்டியுடன் 1116 பேர் அமரும் வகையிலும் 3898 பேர் நின்று கொண்டு செல்லும் வகையிலும் என மொத்தம் 4914 பயணிகள் இதில் பயணிக்க முடியும். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
இந்த ரயிலில் கூடுதல் வசதிகளாக தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் கருவியுடன் தகவல் தெரிவிக்கும் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகளும் இடம் பெற்றுள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரயிலை தெற்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அதன் பிறு ரயிலானது பயன்பாட்டிற்கும் வரும் என்று தெரிகிறது.
எந்த தடத்தில் இயங்கும்?
தற்போது இந்த ரயிலானது சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ரயில் மார்ச் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்.