நேற்று ஏபிபி நாடு செய்தி  நிறுவனத்துக்கு நரிக்குறவர் என பெண் அளித்த பேட்டி எதிரொலியாக, அஸ்வினி உட்பட மூன்று நரிக்குறவர்களுக்கு , மகாபலிபுரம் பகுதியில் கடை ஒதுக்கப்பட்டது.


 






கோயில் அன்னதானத்தில் இருக்கை மறுக்கப்பட்ட நிலையில், தனக்கும் தான் சார்ந்த இனத்துக்கும் இழைக்கப்படும் அநீதி குறித்து நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி பேசிய வீடியோ கடந்த ஆண்டு பெரும் வைரலானது.


அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அஸ்வினியுடன் அமர்ந்து கோயில் அன்னதான உணவு உட்கொண்டார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்வினியையும் சேர்த்து பூஞ்சேரியில் உள்ள 81 பழங்குடியினர் குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி அன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


ஆனால், முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட உதவிகள் பல்வேறு காரணங்கள் கூறி மறுக்கப்படுவதாக அஸ்வினி நமது ஏபிபி நாடு செய்திகளிடம் நேற்று (ஆக.18) பகிர்ந்திருந்தார்.


 






செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என வேதனையுடன் பேசினார் அஸ்வினி. ”எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் வந்தார். 12 பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தாங்க, 30 பேருக்கு 10 ஆயிரம் லோன் கொடுத்தாங்க, பட்டா, வீடு என நிறை சொன்னாங்க, ஆனால் எதுவுமே நடக்கவில்லை.


ஒரு லட்சம் லோன் யாருக்கும் கொடுக்கவில்லை, ஒரு வருடம் ஆகிவிட்டது. கடை இருந்தா மட்டும் லோன் கொடுப்போம் என வங்கியில் கூறுகிறார்கள். இது தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசனை பார்த்தோம், அவர் மாவட்ட ஆட்சியரை பார்க்க சொன்னார். மாவட்ட ஆட்சியர் கடை கொடுக்கலாம் எனக் கூறினார். விஏஓ வந்து பார்த்தார்கள் கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார்கள்.


மகாபலிபுரம் முழுவதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு என ஒரு கடை கூட கிடையாது, வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது, கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலைக் கூட எடுத்து சென்று விட்டார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என முன்னதாக அஸ்வினி வருத்தத்தோடு பகிர்ந்திருந்தார்.




இந்நிலையில், ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக அஸ்வினி உள்ளிட்ட 4 பெண்களுக்கு மாமல்லபுரத்தில் கடை ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று (ஆக.19) உத்தரவிட்டுள்ளார்.