தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, தமிழகம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் 2020 முதல்  ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரிப்பு வந்த பொழுது, பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன. 



பொதுவாக தற்பொழுது TAQPATH மற்றும் LAB GUN எனப்படும் கருவிகளை வைத்து கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய். பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் கருவியானது , ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை வைத்து பரிசோதனை மேற்கொள்வார்கள், அவ்வாறு ஒரே நேரத்தில் 1000 மாதிரிகள் வைத்து பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே அந்த கருவி வீணாகாமல் முறையாக பயன்படுத்த முடியும்.

 

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் ஆர்.டி.பி.சி.ஆர்  ஆய்வு மையத்தில் அலட்சியத்தின் காரணமாக கொரோனா பரிசோதனை கருவிகள் வீணாகி உள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படத்தில் lab gun என்ற கருவியின் காலாவதி தேதி எனது கடந்த ஏப்ரல் மாதமே முடிவடைந்துள்ளது. அதேபோல் ஆய்வகத்தில் உள்ள சேமிப்பு பெட்டகத்தில் காலாவதியான நூற்றுக்கணக்கான கொரோனா பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை  கருவிகள் பயன்படுத்தப்படாமல் வீணாகி உள்ளன. பொதுவாக இவ்வாறு அதிக அளவு மருத்துவப் பொருட்கள் கையிருப்பு இருந்தால், இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு அந்தத் துறை தலைவர் தெரிவிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், தேவைப்படுபவர்கள் அந்த மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்து வீணாகாமல் தடுப்பார்கள். 



செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வீணாகி உள்ள மருத்துவக் கருவிகள் குறித்து  முறையாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்காத காரணத்தால் தான் ,கொரோனா பரிசோதனைக்கு கருவிகள் வீணாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பரிசோதனை செய்யும் கருவியின் ஒன்றின் விலை 2 லட்சத்திற்கு மேல் இருப்பதால், தற்பொழுது செங்கல்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையத்தில் வீணாகி உள்ள கருவிகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது.



இதுகுறித்து கோவையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறையாக திட்டமிட்டு செயல்படாத காரணத்தினால் பல கோடி மதிப்புள்ள கொரோனா கருவிகள் வீணாகி உள்ளதாக  தெரிவித்துள்ளார். மேலும், காலாவதியான மருத்துவ உபகரணங்கள் குறித்து உண்மை வெளிவர உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார் இதுகுறித்த செய்தி நமது ஏபிபி நாடு இணையதளத்தில் வெளியாகியிருந்தது. 



இந்நிலையில், இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ மனையில், இது தொடர்பாக துறைத் தலைவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் புகார் மனு கொடுத்தவர்கள் மற்றும் ஆய்வக துறைத்தலைவர் ஆகியோரிடம், மருத்துவமனை முதல்வர் முன்னிலையில் விசாரணை குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில் விசாரணைக் குழு உறுப்பினர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.