செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராம கடற்கரையோரத்தில் இருந்து நேற்று இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிடந்தை அருகே டிடிடிசி ஓசோன் வியூவில் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.



 

சவுண்டிங் ராக்கெட்டில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் மூலம் வானிலைநிலவரம், காற்றின் நச்சுத்தன்மை, மண் வளங்கள், ஆக்சிஜன், ஹைட்ரஜன் அளவு மற்றும் வளிமண்டல நிலை, கதிர்வீச்சு தன்மை குறித்த தகவல்களை பெற முடியும். இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் இதுவாகும்.

 



 

இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு மயில்சாமி அண்ணாதுரை அளித்த பிரத்யேக பேட்டி

 

இதுபோன்ற சமயங்களில் வெளிவரும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதிக்கலாம். செஸ் போன்ற விளையாட்டுகளை எப்படி பள்ளி காலக் கட்டத்தில் இருந்து கொண்டு வருகிறார்களோ அதுபோல் ராக்கெட் அறிவியலும் பள்ளி காலத்திலிருந்து கொண்டு வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் குறித்து ஆரம்பம் முதலே சொல்லிக் கொண்டு வந்தால் எப்படி விளையாட்டில் சிறப்பாக பலர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அதுபோல ராக்கெட் அறிவியலில் பெரிய சாதனைகளை புரியலாம். எல்லாருக்கும் திறமைகள் உண்டு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சாதிக்க முடியும். 

 

தனியார் சார்பில் ராக்கெட் ஏவலாம் என அறிவிப்பு வந்துள்ளது இதை எப்படி பார்க்கிறீர்கள் ? 

 

புதிய நாடுகள் தற்போது ராக்கெட் அறிவியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம், அதேபோல் அனைத்தையும் இஸ்ரோ மற்றும் செய்ய முடியாது, தனியார் துறை உதவியாக இருக்கும் நமக்கும் சில தேவைகள் உள்ளது அவையும் பூர்த்தி செய்யலாம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் மயில்சாமி அண்ணாதுரை