கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
அதேபோல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்ற நெட் எனப்படும் தேசித் தகுதித் தேர்வில் (National Eligibility Test - NET) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்குப் பணியிட மாற்றம் தொடர்பாக ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனால் குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்!
தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் உயர் கல்வித் துறைக்கு இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிர்வாகக் காரணம் என்று கூறி சிலருக்கு பணியிட மாற்றங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் தகுதியானவர்களுக்கு இட மாறுதல் கிடைப்பதில்லை!
தகுதியானவர்களுக்கு, நியாயமான, சட்டப் பூர்வ வழியில் இட மாறுதல் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகும். இதில் எந்த முறைகேடுகளும் நடப்பதில்லை. பள்ளிக் கல்வித் துறையில் இந்த முறையில் முறையாக இடமாறுதல் வழங்கப்படுகிறது!
அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தகுதியும், தேவையும் உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்